அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை என ஸ்டாலின் கண்டனம்

DMK Leader MK Stalin Criticise TN Govt

DMK Leader MK Stalin Criticise TN Govt

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஏற்ப சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 2008-ம் ஆண்டில் ஆரம்பித்த சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் எதிர்பார்த்தபடியே தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நல்லூர்பாளையம், வைகுந்தம், எளியார்பட்டி, கொடைரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர் பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இந்தக் கட்டணம் வேறுபடும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கண்டனதை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை. சுங்கச்சாவடிகள் மக்களின் நலனைச் சாகடிப்பதாக இருக்கக் கூடாது”, என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version