மருத்துவ பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்க உத்தரவு

மருத்துவ பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்க உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தும், குடும்பத்தை விட்டு தனிமைப்படுத்திக் கொண்டும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இப்படி மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு மற்றும் அவர்களது ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, அவர்கள் தற்போது வாங்கும் ஊதியத்தை போல் இருமடங்காக வழங்கப்படும் என அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.

இதுவரை அரியானாவில் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர், 32 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version