காஷ்மீரில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் முழுவதும் சுமார் 38,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும், வெளிமாநில மாணவர்களும் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்படும் என்று சில நாட்களாகவே தகவல் நிலவிய நிலையில், இன்று (ஆகஸ்டு 5) நள்ளிரவு 12 மணி முதல் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் த்லைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு எதும் வ்ரவில்லை என்றாலும் தி இந்து உள்ளிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மொபைல், இண்டர்நெட் ஆகியவையும் காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளன.
வீட்டுக் காவலில் தலைவர்கள்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமோ என்று மாநில அரசியல் கட்சிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கெனவே அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது என்று ஆளுநர் உறுதியளித்தார். ஆனாலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசே உறுதியளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
“தற்போதைய நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எது நடந்தாலும் ரகசியமாக நடக்காது. நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும். இரு நாட்கள் காத்திருங்கள்” என்று சத்யபால் மாலிக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காஷ்மீரில் நடக்கும் மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளோம். அரசியல் சூழல் குறித்தும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆலோசிக்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனது இல்லத்தில் சந்தித்தனர். இதற்கு முன் அமர்நாத் யாத்திரை எப்போதுமே ரத்து செய்யப்பட்டதில்லை. இதே நிலை தொடர்ந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இரு நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கிறேன். ஜம்மு, காஷ்மீர், லடாக் மீது ஏவப்படும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் எதிராக நமக்கான அடையாளம், தன்னாட்சி, சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைவது என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி, காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித், சிபிஎம் தலைவர் தாரிகாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கபட்டுள்ளார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவே விழித்துக்கொள்
நேற்று இரவு ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், ‘என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அல்லா நடத்துவது எல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறேன். எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
மெகபூபா முப்தி தனது ட்விடட்ர் பதிவில், “அமைதிக்காக போராடி எங்களைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு முரணானது? ஜம்மு காஷ்மீர் மக்கள் மற்றும் அவர்களின் குரல்கள் குழப்பமடைந்து வருவதால் உலகமே இப்போது எங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைத் தேர்ந்தெடுத்த காஷ்மீர் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறது. இந்தியாவே விழித்துக் கொள்” என்று பதைபதைக்கும் கோரிக்கை முன் வைத்துள்ளார்.
இன்று அமைச்சரவைக் கூட்டம்
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூடும். தற்போது அவசரமாக அமைச்சரவைக் கூடுவதால் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, அரசியல் சாசனத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது மட்டுமே என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். பாஜகவின் நிறைவேறாத அஜெண்டாக்களில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.